
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் சேர்மனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேர்மன் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு இரு வீட்டாரும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனது காதல் தோல்வியில் முடிந்ததாக எண்ணி சேர்மன் சில நாட்களாக வேறு யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது மாட்டு தொழுவத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சேர்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
