Police Department News

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் மகனை அரிவாளால் வெட்டிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது57). விவசாயி. இவருக்கு பிரகாஷ் (40) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். குமரவேல் தனது சொத்தை மகனுக்கும், மகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளார். பிரகாஷ் சில நாட்களாக தனது தங்கைக்கு கொடுக்கப்பட்ட சொத்தில் பங்கு கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று பிரகாஷ் தனது தந்தை குமரவேலிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்து செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமரவேல், மகனை விரட்டி சென்று கொடுவாளால் கழுத்து, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதற்கு அவனது தாயும் விடாதே வெட்டு என கணவரிடம் கூறியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த பிரகாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை தந்தை விரட்டி சென்று அரிவாளால் வெட்டும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேல், இவரது மனைவி கோவிந்தம்மாள் (55) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகனை தந்தை விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் பாலக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.