


திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம்: காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம் திறப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தின் புதிய அலுவலகம் கட்டிடங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ரூ.20.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் ஒன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார், திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்ட அலுவலர் வினோத், உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, திருப்பரங்குன்றம் நிலைய அலுவலர் உதயகுமார் ஆகியோர் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
தற்காப்பு பணிகள் எப்படி மேற்கொள்வது என்று செயல்முறை விளக்கமும் தீயணைப்பு துறையினர் அளித்தனர். புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள தீயணைப்பு வண்டியினை மதுரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ், மதுரை மாநகர் பகுதியைச் சேர்ந்த நிலையத்திலிருந்து பெரியார், தல்லாகுளம் மற்றும் அனுப்பானடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
