புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியுமா?
சென்னை உயர்நீதிமன்றம் ” மந்திரன் கோனான் Vs காவல் துணை கண்காணிப்பாளர், திருச்செந்தூர் (2006-2-MWN-CRL-356)” என்ற வழக்கில், திருமணம் சம்மந்தமாக இல்லாமல் எதிரி தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக மனைவியிடம் பணம் கேட்டால் அதனை இ. த. ச பிரிவு 498 A ன் கீழான குற்றமாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் உச்சநீதிமன்றம் ” பிரீத்தி குப்தா Vs ஜார்க்கண்ட் மாநில அரசு (2010-7-SCC-667)” என்ற வழக்கில், ஒரு கணத்தில் ஏற்படுகிற கோபத்தின் காரணமாக பெரும்பாலான புகார்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழ் கொடுக்கப்படுகிறது. ஒரு சிறு விசயத்தை மிகவும் பெரிதுபடுத்தி அது சம்பந்தமாக புகார் அளிக்க கூடாது. வழக்கறிஞர்கள் இ. த. ச பிரிவு 498 A ன் கீழான பிரச்சினையை ஒரு அடிப்படை சமூக பிரச்சினையாக கருதி அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொய் புகார் கொடுக்க உடந்தையாக இருக்கக்கூடாது. பல பொய் புகார்கள் உருவாக வழக்கறிஞர்கள் காரணமாக இருக்கக்கூடாது. எனவே பொய்யான வரதட்சணை வழக்குகளை ஏற்க முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
இதே கருத்தை உச்சநீதிமன்றம் ” பஸ்கான் குமார் மீன் Vs பஞ்சாப் மாநில அரசு” என்ற வழக்கில் வலியுறுத்தியுள்ளது.
எனவே புதிதாக தொழில் துவங்குவதற்கு தன் மனைவியின் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரும்படி கணவர் கூறினால் அதனை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.அதெல்லாம் சரி இந்த சட்டப்பிரிவு என்னதான் கூறுகிறது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498A (IPC)
விளக்கம்
ஒரு பெண்ணை, அவளுடைய கணவன் அல்லது கணவரின் உறவினர்களில் ஒருவர் கொடுமைப்படுத்தினால் அந்த நபருக்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவில் வரும் கொடுமைப்படுத்துதல் என்ற சொல் தரக்கூடிய பொருள் யாதெனில்; 1. ஒரு பெண்ணைத் தற்கொலை செய்து கொள்ளும்படி தூண்டக்கூடிய அல்லது அவளுடைய உயிருக்கு, உடலுக்கு அல்லது சுகத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு செயலைக் குறிக்கும் (அது உடலுக்கு அல்லது உள்ளத்துக்கு கேடுபயக்கக் கூடியதாகக் கூட இருக்கலாம்) 2. சட்ட விரோதமாக ஒரு சொத்தை அல்லது மதிப்புள்ள காப்பீட்டை அந்தப் பெண் மூலம் அல்லது அவளுடைய உறவினரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெற வேண்டும் என்பதற்காக அல்லது அப்படி அவளால் அல்லது அவளுடைய உறவினரால் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்பதற்காக அந்தப் பெண்ணுக்குப் பொறுக்க முடியாத சங்கடங்களை உண்டாக்குவதைக் குறிக்கும்.