
கோயம்புத்தூர்
குனியமுத்தூரில் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பெயிண்டர்கள் கைது
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 50). இவர் தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டில் பெயிண்ட் அடித்து புதுப்பித்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்த சஞ்சீவ்குமார் (26), ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சூர்யா (24) ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் கடந்த 3 நாட்களாக நாகராஜனின் வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் பெயிண்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது நாகராஜன் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றார். இதனை சாதகமாக பயன்படுத்திய சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோர் வீட்டில் இருந்த 2 கிராம் கம்மல், 1 கிராம் மூக்குத்தி, வெள்ளி கொலுசு, பித்தளை குடம், ரூ.6,500 ரொக்க பணம் உள்ளபட ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி வெளியே மறைத்து வைத்தனர்.
பின்னர் வழக்கம் போல மாலையில் வேலை முடிந்ததும் திருடிய பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.
தனது வீட்டில் உள்ள பீரோவை நாகராஜன் பார்த்த போது அதில் இருந்த நகை, பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சீவ்குமார், சூர்யா ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேலைக்கு சென்ற வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை மீட்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
