
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைபொருள் விற்ற ரவுடி கும்பல்
கோவையில் போதைபொருள் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகர போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதற்காக சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாநகர் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சின்னவேடம்பட்டி அத்திபாளையம் ரோட்டில் உள்ள சுடுகாடு அருகே 7 பேர் கும்பல் போதைப்பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன் பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கும்பல் நின்றிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் 7 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சுஜிமோகன், அஸ்வின் என்ற அஸ்வின் குமார், அமர்நாத், பிரசாந்த், ராஜேஸ், புள்ளி பிரவீன் என்ற பிரவீன்ராஜ், பிரதீப் என்பதும், இவர்கள் கோவையில் ரவுடிகளாக வலம் வந்தது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
சுஜிமோகன் உள்ளிட்ட 7 பேர் கும்பலும் பெங்களூருவில் இருந்து மெத்தாபெட்டமைன் என்னும் போதைப்பொருளை கடத்தி வந்து கோவையில் அதனை விற்பனை செய்துள்ளனர்.
குறிப்பாக கோவையில் உள்ள கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து இந்த விற்பனையில் ஈடுபட்டதும், ஒரு கிராம் போதைபொருளை ரூ.3,500-க்கு என அதிக லாபத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் சரவணம்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் கைதான சுஜிமோகனிடம் இருந்து 55 கிராம் போதை பொருளும், அஸ்வினிடம் இருந்து 1.2 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 7 பேர் மீதும் கோவையில் உள்ள சரவணம்பட்டி, ரத்தினபுரி, துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், பீளமேடு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தல், அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் 7 பேரும் கொலை, கொலை முயற்சி, திருட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முறையாக ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
