பண்ருட்டி – கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பழைய திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகளை தூசிதட்டி எடுத்து துப்புத்துலக்கி கொலை, கொள்ளைகாரர்களை அதிரடியாக கைது செய்து பொதுமக்களின் பாராட்டையும், நன்மதிப்பினையும் பெற்றுள்ளார். இவரது பல்வேறு அதிரடி களுக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைகளில் தினமும் நடைபெற்று வரும் விபத்துகளை குறைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். வாகன ஓட்டிகள் வாகன விதிகளை மீறாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை போலீசார் மூலம் எடுத்து வருவதுடன் உயிர் பலியை தடுக்க பல நடவடிக்கை எடுத்து வருகிறார்.அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார். பண்ருட்டி -கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற நேற்றிரவு கடலூரில் இருந்து துவங்கிய அவரது பயணம் மாவட்ட எல்லையான வீரப்பெருமாநல்லூர் வரை சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன்ஆகியோருடன் ஆலோசனை நடத்தி தக்க அறிவுரைகளை வழங்கினார்