மக்களை மயக்கி நூதன மோசடி- ஒரு ‘லைக்’ போட்டால் 200 ரூபாய் கிடைக்குமா?
சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மூலம் குறுஞ் செய்திகள் அல்லது விளம்பரங்கள் வாயிலாக நிதி மோசடி அதிக அளவில் நடை பெறுகிறது. ஒரே ஒரு லைக் போட்டால் ரூ.200 கிடைக்கும் என்று மக்களை மயக்கி ஏமாற்றி நூதனமாக பணம் பறிக்கிறார்கள்.
சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து சைபா் கிரைம் போலீசாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்களை சமூகவலை தளத்தின் மூலம் தொடா்பு கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. முதலில் சில யூடியூப் காணொலிகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என பொது மக்களை நம்ப வைக்கின்றனா். அதற்கு சிறிது பணமும் கொடுக்கிறாா்கள். பின்னா், அவா்கள் அனைவரும் ஒரு டெலிகிராம் குழுவில் சோ்க்கப்பட்டு, சில ஓட்டல் பக்கங்கள், நிறுவனங்களுக்கு லைக் செய்ய சொல்லி அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
இதற்கிடையில் இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள். அவற்றில் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனா். இதற்கு பயனாளா் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கம் செய்கின்றனா்.
பொதுமக்களை நம்ப வைக்க, மோசடி நபா்கள், தாங்கள் ஏற்கெனவே இதில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றதைப்போல் போலியான ஆதாரங்களைக் காட்டுவா். இதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்வா். முதலில் லாபம் வருவதைப்போல் உருவகம் செய்யப்பட்டு மக்களின் முதலீட்டுத் தொகை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பல்வேறு பொய்களைக் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனா்.
எனவே, சமூகவலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, லிங்க்கை தொடவோ, தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப் படும் கடவுச்சொல்லை யாருடனும் பகிரவோ வேண்டாம்.
1930 என்ற உதவி எண்ணை 24 மணி நேரத்துக்குள் தொடா்பு கொண்டால் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகாா்களுக்குwww.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது