Police Recruitment

தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம்

தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம்

சிவகிரி அருகே தேவிபட்டணம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சிவகிரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேவிபட்டணம் கிராமத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை அந்த சமுதாய பொறுப்பாளர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், தேவிபட்டணம் கிராமத்தில் யாரையாவது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கிறார் என்று போலீசார் கைது செய்தால் அவர் எந்த சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டவரோ அந்த சமூகத்திற்கு போலீசார் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்காது எனவும், தேவிபட்டணம் கிராமத்தில் சட்ட விரோதமாக யாரேனும் மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறார் என்று குறிப்பிட்ட சமுதாய பொறுப்பா ளர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அதன் அடிப்படையில் போலீசார் அந்த குறிப்பிட்ட நபரை கைது செய்தால் அவர் சார்ந்த சமூகத்தில் இருந்து தேவிபட்டணம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவரின் வீட்டில் குடிதண்ணீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய நாட்டாமை தங்கம், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவேந்திரகுல தலைவர் சவுந்தரராஜன், குலாளர் சமுதாய தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்கராஜ், ராமராஜ், குருசாமி, கனகஜோதி, கிரேஸி, அழகப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.