
ஆலங்குளத்தில் மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை குடும்பம் நடத்த வருமாறு கைலாசகுமார் அழைக்க சென்றுள்ளார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கைலாசகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேம்புலதாவை முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். அதனை தடுக்க வந்த அவரது தாயார் பகவதிக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய கைலாசகுமாரை கைது செய்தனர்.
