
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
தருமபுரி மாவட்டத்தில் பஸ் மற்றும் ரெயில் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா மர்மநபர்கள் கடத்தி வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜோசுபதமிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் போலீசார் தருமபுரி நகர் மற்றும் பஸ், ரெயில் நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தருமபுரி பஸ் நிலையத்தில் 2 பேர் சந்தேகம்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் மாவட்டம் சங்ககிரி ஏ.ஆர்.செட்டிப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சதீஸ்குமார் (வயது 33), ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 2 பேர் பையில் 8 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
