
கிராம மக்கள் பஸ்சை மறித்து திடீர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாளப்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளியில் குடிதண்ணீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் சத்திர வெள்ளாளப்பட்டி கிராம மக்கள் இன்று காலை ஊருக்கு வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாணவிகள், பெற்றோர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாலமேடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளியில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி கூறப்பட்டது. இதையடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

