Police Recruitment

அ.தி.மு.க. மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மதுரை எஸ்.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

அ.தி.மு.க. மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: மதுரை எஸ்.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.பி.உதயகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் வருகிற 20-ந்தேதி விமான நிலையம் அருகில் வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டிற்கு ஏற்கனவே சில பொதுவான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான பொதுமக்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாட்டிற்கு வரும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், மாநாட்டு பகுதியில் போக்குவரத்து சீர் செய்யவும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நிறுத்த தேவையான இடவசதிகள் ஏற்படுத்த கோரி போலீஸ் அதிகாரிகளிடம் புதிய மனு அளிக்கப்பட்டது.
எனவே, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி நாகர்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் , அ.தி.மு.க. மாநாட்டில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதால் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

முடிவில் நீதிபதி, ஆகஸ்ட் 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையிலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையிலும் தேவையான உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை காவல்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.