Police Recruitment

முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு

முன்ஜாமீன் பெற்றவரை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்புடையதல்ல- விடுதலை செய்ய புதுக்கோட்டை எஸ்.பி.க்கு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூரைச் சேர்ந்தவர் மீனாள். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் வேலுகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் இருதய நோயாளி. நீரிழிவு நோய்க்காகவும் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லல் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் என்னுடைய கணவர் பெயரையும் போலீசார் சேர்த்தனர்.

சமீபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த என் கணவரை, இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 6-ந்தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றனர். இதுவரை அவரது நிலை என்ன என்று தெரியவில்லை. எனது கணவரை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல் குமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரர் கணவர் மீதான வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் அளித்து கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் மனுதாரர் கணவரை போலீசார் கைது செய்தது சட்டவிரோதம் என வாதாடினார்.

அரசு வக்கீல் ஆஜராகி, சந்தேக மரணம் என்று பதிவான வழக்கை, தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள மனுதாரர் கணவர் விசாரணைக்கு மட்டுமே போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விரைவில் விடுவிக்கப்படுவார் என்றார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கணவர் இருதயம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். அவருக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் கிடைத்தும், அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து உள்ளனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையானது, கோர்ட்டுக்கு கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இது ஏற்புடையதல்ல. எனவே அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் படி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இதற்கிடையே மனுதாரரின் கணவருக்கு ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவிட்டதன்பேரில், ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Leave a Reply

Your email address will not be published.