வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீச்சு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டனர்.
அதன்பின் வாடிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் முரு கேசன், மாயாண்டி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் கிரே கலர் பேண்டும், புளூ கலரில் வெள்ளை புள்ளி போட்ட முழுக்கை சட்டை யும் அணிந்திருந்தார். உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. முகம் முழுவதும் உப்பிய நிலையில் காணப்பட்டது.அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கிணற்றை சுற்றி உள்ள பகுதியில் பேக், செல்போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி விசாரித்து வருகிறார்.