மக்களே உஷார்… போலி ஏ.டி.எம். கார்டுகளை அனுப்பி மொத்த பணத்தையும் சுருட்டும் ஆன்லைன் மோசடி
ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்கள் வங்கி பரிவர்த்தனை தொடர்பாக பொய்யான தகவல்களை தெரிவித்து வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் தற்போது போலியான ஏ.டி.எம் கார்டுகளை தபாலில் அனுப்பி வங்கியில் உள்ள பணத்தை சுருட்டும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் முதலில் ஆன்லைனில் வாடிக்கையாளர்களின் வங்கி தொடர்பான தகவல்களை சேகரிப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தேர்வு செய்து அவர்களது வீட்டு முகவரிக்கு தபாலை அனுப்புவார்கள். அதில் போலியான ஏ.டி.எம். கார்டுகளை அனுப்பி வைப்பார்கள்.
பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களது செல்போனுக்கு வங்கியில் இருந்து ஓ.டி.பி. எண் வந்திருக்கும். அதனை உடனே சொல்லுங்கள். அப்போதுதான் உங்களது புது ஏ.டி.எம். கார்டு செயல்பட தொடங்கும். பழைய ஏ.டி.எம். கார்டும் செயல்படும் என்று பயமுறுத்தும் வகையில் பேசுவார்கள். இதை நம்பி நீங்கள் ஓ.டி.பி. எண்ணை சொல்லிவிட்டால் போதும் அடுத்த சில நொடிகளிலேயே வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் மோசடி கும்பல் சுருட்டி விடும்.
அதன் பிறகே சம்பந்தப்பட்ட நபர் ஏமாற்றப்பட்டதை உணர்வார். அதற்குள் மோசடி ஆசாமி சுருட்டிய பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி இருப்பான். அவன் எங்கு இருக்கிறான் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மோசடி கும்பல் மிகவும் உஷாராக செயல்படுவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் போனில் யார் ஓ.டி.பி. எண்ணை கேட்டாலும் கொடுக்கக்கூடாது என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் வங்கியில் உள்ள பணம் பத்திரமாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.