மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் கணுக்காலை இழந்த மதுரை விளையாட்டு வீரர்
மதுரை கோச்சடை முத்துராமலிங்க தேவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தம் என்பவரது மகன் பரிதி விக்னேஸ்வரன் (வயது 19). இவர் கோவை கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே நேற்று மாலை கோச்சடை பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு பரிதி விக்னேஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயம் கோச்சடை முத்தையா கோவில் அருகே மின்கம்பம் ஒன்று பழுதாகி சேதமடைந்து இருந்தது. பழுதான அந்த மின்கம்பத்தை மின்சார வாரியத்தினர் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் மின்வாரிய ஊழியர்கள் 4 பேர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது கட்டுக்கம்பிகளை மின்கம்பத்தில் கட்டி கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது. இதில் எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் விழுந்தது. அதேநேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாணவர் பரிதி விக்னேஷ்வரன் மீது மின்கம்பம் விழுந்தது.
இதில் மாணவனின் இடது காலில் கணுக்கால் முறிந்து துண்டாகி ரத்தம் கொட்டியது. இதனால் துடிதுடிக்க அந்தப் பகுதியில் கீழே விழுந்த மாணவன் விக்னேஸ்வரனை சக நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்கம்பம் மாற்றும் பணியின் போது எந்தவித அறிவிப்பு பலகையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், பாதுகாப்பு உபகரணங்களும் எதையும் பின்பற்றாமல் மிகவும் அஜாக்கிரதையாகவும், அலட்சியமாகவும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட பணிகளால் தான் விக்னேஸ்வரனின் கணுக்கால் பகுதியை இழந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான தேசிய போட்டியில் கலந்துகொள்ள தன்னை தயார்படுத்தி வந்த மாணவர் பரிதி விக்னேஸ்வரன், மின் வாரிய துறையின் அலட்சியமான பணியால் கால் துண்டாகி தற்போது அவரது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாய் இருப்பதாக மாணவனின் நண்பர்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவரின் தாய் கூறுகையில், 3 டன் எடை கொண்ட மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரியத்தினர் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்ததே எனது மகனின் கால் துண்டாக காரணமாகும். போதிய வருவாய் இன்றி தவித்து வரும் எனது குடும்பத்தை காப்பாற்ற பலத்த காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு அரசு வேலை வழங்கவேண்டும். மேலும் இந்த விபத்துக்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதுதொடர்பாக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் கம்பம் மாற்றும் பணியில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைப்படி தான் நடந்தது. ஆனால் மாணவரின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது என்றார்.
இந்நிலையில் மின்கம்பம் பொருத்தும் பணியின் பொழுது அலட்சியமாக எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் முன்னறிவிப்புமின்றி பணிகள் மேற்கொண்ட கிரேன் ஆபரேட்டர் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இருவர் என மூன்று பேர் மீது மதுரை எஸ்.எஸ். காலனி போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்