
வருசநாடு அருகே அ.தி.மு.க நிர்வாகி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையன்
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(60). அ.தி.மு.க பிரமுகரான இவர் க.மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மனாவார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் நாய்குரைக்கும் சத்தம் கேட்கவே எழுந்து வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்து அங்கே சென்று பார்த்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் திடீரென தான் கையில் வைத்திருந்த கயிறால் அவரை கழுத்தை இறுக்கினார்.
இதில் ராமர் விடுபட்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வருசநாடு போலீசில் ராமர் புகார் அளித்தார்.
கொள்ளையடிக்கும் நோக்கில் தனது வீட்டில் புகுந்த கொள்ளையன் தான் சுதாரித்துவிட்டதால் தன்னை தாக்கியதாகவும், அவரை பிடித்து கைது செய்யும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.
