
உடல் உறுப்புகளை ரூ.7 லட்சத்திற்கு விற்ற மந்திரவாதி கைது
கேரளாவில் மாந்திரீக பூஜைகள் செய்து பணம் இரட்டிப்பு மோசடி செய்து வரும் கும்பல் தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அந்த காரில் இருந்த நபர்கள் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகள் பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதுதவிர எலுமிச்சைபழம், சூடம், முட்டை போன்றவைகளும் இருந்தன.
அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(38), ராதநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட்பிரதாப்சிங்(40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன்(65) என தெரியவந்தது. இவர்களுடன் வந்த உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ்(52) என்பவர் தப்பிஓடிவிட்டார்.
இந்த கும்பல் மாந்திரீக வேலையில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் மாந்திரீக வேலையில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். இவரிடம் பிடிபட்ட 3 பேரும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக மாறுவது எப்படி? என்றும் அதற்கு பூஜைகள் உள்ளதா எனவும் கேட்டுள்ளனர். இதனையடுத்து ஜேம்ஸ் அவர்களிடம் ரூ.5லட்சம், ரூ.2 லட்சம் என தொகை நிர்ணயம் செய்து கேரள மாநிலம் வண்டிபெரியாறில் ஒரு மந்திரவாதி உள்ளார். அவரிடம் சென்று பணத்தை கொடுத்து அவர் கொடுக்கும் பொருளை வாங்கி வாருங்கள். அந்த பொருளை நான் பூஜை செய்து தருகிறேன். அதன்பிறகு வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் பணமழை கொட்டும் என சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனைநம்பிய அலெக்ஸ்பாண்டி, டேவிட், முருகன் ஆகிய 3 பேரும் கேரளமாநிலம் வண்டிபெரியாருக்கு சென்றனர்.
ஜேம்ஸ் கொடுத்த விலாசத்திற்கு சென்ற அவர்கள் மந்திரவாதி பூஜை செய்து கொடுத்த சூட்கேசுடன் தேனிக்கு வந்துள்ளனர். வரும் வழியில் பெட்டியை திறந்து பார்க்க கூடாது. அவ்வாறு திறந்து பார்த்தால் பொருளின் சக்தி மறைந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் பணத்தை கொடுத்துவிட்டு பெட்டியில் என்ன இருக்கிறது என தெரியாமல் அதனை வாங்கி வந்துள்ளனர். பெட்டியில் இருந்த மூளை, நாக்கு, கல்லீரல் உள்ளிட்ட பொருட்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவை நரபலி கொடுத்து எடுக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மந்திர வேலைகளில் ஈடுபடும் கும்பல் பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வண்டிபெரியாறை சேர்ந்த மந்திரவாதி தற்போது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். அவரை தேனிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த உள்ளோம். அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோசடியில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என தெரியவரும். தற்போது தலைமறைவாக உள்ள ஜேம்ஸ் என்பவரையும் தீவிரமாக தேடி வருகிறோம். இவர் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடி புகார்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் இந்த கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாந்து இருந்தால் அதுகுறித்து போலீசில் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்றனர்.
