
சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள்
கனடாவில் நடைபெற்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை 41 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
கனடாவில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 8,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த 15 காவலர்கள், போலீஸார், தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். 15 தங்கம், 11 வெள்ளி, 15 வெண்கலம் என 41 பதக்கங்களை வென்றுள்ளனர்.
அரசிடம் அனுமதி பெற்று சொந்த செலவில் கனடா சென்று பொதுப்பிரிவில் கலந்து கொண்டனர்.
அகில இந்திய காவல்துறை விளையாட்டு வாரியம் மூலம் பங்கேற்கவில்லை. பொதுப்பிரிவில் பங்கேற்பவர்களை வாரியம் அங்கீகரிப்பதில்லை என்றும், அதனால் அவர்கள் அரசால் பரிசீலிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் அகில இந்திய போலீஸ் விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய அணி சார்பில் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு போலீஸார் கலந்து கொண்டனர்.
ஆறு தங்கம், ஏழு வெள்ளி உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளனர். நாளை ரயிலில் வரும் காவலர்களை காவல் துறை வரவேற்கிறது.
