குறிப்பிட்ட நாட்களுக்குள் புகார்களுக்கு தீர்வு புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் உறுதி
மதுரையில் ‘போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்படும் புகார்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காணப்படும்” என மதுரை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற ஜெ.லோகநாதன் உறுதி அளித்தார்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், எம்.எஸ்.சி., (விவசாயம்) பட்டதாரி. அதில் முனைவர் பட்டம் பெற்றார். ஐ.எப்.எஸ்.,(இந்திய வனத்துறை) அதிகாரியாக ஜார்கண்டில் பணியாற்றினார். பின்னர் 2002ல் ஐ.பி.எஸ்., அதிகாரியானார். திருநெல்வேலியில் ஏ.எஸ்.பி.,யாகவும், தர்மபுரி எஸ்.பி.,யாகவும் பணியாற்றினார். பின்னர் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., புதுக்கோட்டை எஸ்.பி., தஞ்சாவூர் டி.ஐ.ஜி., திருச்சி கமிஷனர், ஆயுதப்படை ஐ.ஜி., சென்னை கமிஷனர் அலுவலக தலைமையிட ஐ.ஜி.,யாக பணியாற்றினார்.
அவர் கூறியதாவது:
சட்டம் ஒழுங்கு, குற்றங்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடக்கும் பகுதிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு காணப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக போலீசாரின் நலன்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
தமிழக அளவில் ரவுடிகளை கண்காணிக்க ‘டிராக் சிஸ்டம்’ உள்ளது. அதன் அடிப்படையில் மதுரையில் ரவுடிகள் கட்டுப்படுத்தப்படுவர். போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்படும் புகார்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.