
நோயாளி விபரங்கள் வெளியிட்டு விளம்பரம் தேட டாக்டர்களுக்கு தடை
நோயாளிகளின் விபரங்களையும், புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட்டு, விளம்பரம் தேடக் கூடாது’ என, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, என்.எம்.சி., வெளியிட்டுள்ள புதிய விதிகள்:
மருத்துவ துறையினர், ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் அறிவிப்புகளில், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயர், அவர்களுடைய வீடியோ பதிவுகளை வெளியிடக் கூடாது.
மாறாக, சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவமனை பெயரில் பொதுவாக வெளியிடலாம்.
ஒரு டாக்டர் புதிய மருத்துவமனையை துவங்கும்போதும், மருத்துவமனை இடத்தை மாற்றும்போதும், அதன் செயல்பாடுகள் குறித்து விளம்பரம் செய்யலாம். அதே நேரம், டாக்டர்களின் பெயர், புகைப்படம் போன்றவை, சமூக வலைதளங்களில் இடம்பெறக் கூடாது.
தனியார் மருத்துவமனைகள் தங்கள் இணைய பக்கத்தில், அங்கு பணியாற்றும் டாக்டர்கள் குறித்த விபரங்கள், அவர்களின் பட்டங்கள் குறித்து குறிப்பிடலாம். ஆனால், எவ்வித சிறப்பு விபரங்களையும் வெளியிடக் கூடாது.
பொதுவாக, மருத்துவமனைகள் குறித்த விளம்பரங்களுக்கு தடையில்லை. அவற்றில் ஒரு டாக்டரை முன்னிலைப்படுத்தி, அவரது புகைப்படம் வெளியிடக் கூடாது. இத்தகைய மருத்துவ வரைமுறைகளை மீறி செயல்படும் டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
