
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று முதல் மீண்டும் திறப்பு- கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு
கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்மரக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்து காரணமாக வனப்பகுதி சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்துதல், கழிவறைகள் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகளுக்காக 2 தினங்களாக அப்பகுதி மூடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இன்று முதல் வனப்பகுதி சுற்றுலா தளங்கள் திறக்கப்படுகிறது. தற்பொழுது வனப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுனர் உரிமம், வாகனபதிவு புத்தகம், வாகன காப்பீட்டுச் சான்றிதழ், வாகன மாசு சான்றிதழ் ஆகியவை முறையாக உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தல வனப்பகுதிக்குள் இவ்வாறான சான்றிதழ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மோயர் சதுக்கம் பகுதியில் வாகன நுழைவு கட்டணம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல ஒரே நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படும். வனப்பகுதிக்குள் உள்ள சுற்றுலாத்தலத்தில் வாகன நுழைவு கட்டணம் அரசாணையின்படி வசூலிக்கப்படும். பேரிஜம் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 50 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், பேரிஜம் நுழைவு அனுமதிச்சீட்டு பெற பழைய கட்டணங்களே நடைமுறைப்படுத்தப்படும். பேரிஜம் செல்ல அனுமதி சீட்டு பெற்ற வாகனத்திற்கு மறைமுக கட்டணங்கள் வசூல் செய்யப்படமாட்டாது. சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளுக்காக அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் மூடப்படும்.
இவ்வாறு கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஒரே இடத்தில் வாகன நுழைவுக் கட்டணம், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க ஒரே நுழைவுச்சீட்டு கட்டணம் வசூலிப்பது, வாகனங்களுக்குரிய முழுமையான ஆவணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சரிப்பார்ப்பது என்பது கால விரயத்தை அதிகரிக்கும், அதோடு வாகனங்கள் நுழைவுச்சீட்டு என்பது அடாவடி நடவடிக்கை என உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொடைக்கானல் நகராட்சி எல்லையில் உள்ள சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்திற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், சுங்க சாவடியையே அகற்ற வேண்டும் என்ற எதிர்ப்பு நிலையிலும் மற்றும் ஒரு டாக்ஸி ஓட்டுனர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல் வனத்துறையில் சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்வது உள்ளூர் மற்றும் வெளியூர் டாக்ஸி,வேன் ஓட்டுநர்களையும் கடுமையாக பாதிக்கும் என கொடைக்கானல் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே வாகன நுழைவு கட்டணம் என்ற புதிய விதியையும்,வாகன சரிபார்ப்பு என கால நேரத்தை வீணடிப்பதையும் கொடைக்கானல் வனத்துறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
