
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை தேடுதல் வேட்டை நடத்தும் திண்டுக்கல் போலீசார்
திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் கிறிஸ்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மின் மயானம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஜாக்குலின் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.
