கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனா்.
திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்தவர் அங்குராஜ். அவருடைய மகள் சுபாஷினி (வயது 21). விஜயமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சுராஜ் மகன் யஸ்வந்த்ராஜ் (22). இவரும், சுபாஷினியும் காங்கேயத்தில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்தனர். இதனால் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது வீட்டுக்கு தெரியவரவே, இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் காதல் ஜோடியினர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் கோபியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசினர். இதில் யஸ்வந்த்ராஜுன் வீட்டில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவருடன் சுபாஷினி அனுப்பி வைக்கப்பட்டார்.