
தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு..சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!
தேசத் துரோக சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால் இதை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டது. அதில் மத்திய, மாநில அரசுகள் இதைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது.
கடந்தாண்டே இந்த மனுக்கள் மீதான வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது தேசத்துரோக சட்டப் பிரிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் அதற்குப் பிறகு இந்தப் பிரிவில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யவில்லை.
இதற்கிடையே இன்று இந்த மனு மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இடைப்பட்ட இந்த காலத்தில் மத்திய அரசு கிரிமினல் சட்டங்களை மொத்தமாக மாற்றும் மூன்று மசோதாக்களை முன்மொழிந்திருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், இதில் பல முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, இந்தச் சட்டத்தை மத்திய மாநில அரசுகள் பழிவாங்கப் பயன்படுத்துவதாக வாதங்கள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள சட்டங்களில் ஒன்று.. பாரதிய நியாய சன்ஹிதா மசோதா இது.. 1860களில் இருந்து இருக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றும்.. அதேபோல பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தையும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 இந்தியச் சாட்சிகள் சட்டத்தையும் ஆகியவை மாற்றி அமைக்கப் பயன்படும்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது: முன்மொழியப்பட்ட இந்த புதிய பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் வெளிப்படையாகப் பிரிவு 124A இல்லை என்ற போதிலும், அதேபோன்ற ஒரு சட்டத்தைப் பிரிவு 150இல் கொண்டுள்ளது. புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ள இந்த விதி ‘தேசத்துரோகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. மாறாக இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களைக் குற்றமாக விவரிக்கிறது.
முன்னதாக இந்தாண்டு மே 1ஆம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தவொரு தெளிவான பதிலையும் கூறாமல்.. 124A (தேசத்துரோகம்) பிரிவை மறுபரிசீலனை செய்வது குறித்த ஆலோசனைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக மட்டும் மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியது.
அந்த மூன்று புதிய சட்டங்கள் அடுத்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கு இன்று டி.ஒய். சந்திரசூட் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வருவது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
