Police Recruitment

வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தாசில்தார் மனைவியை கொன்று 10 பவுன் நகை கொள்ளை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)
இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் அற்புதம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் பேசிவிட்டு வீட்டில் தூங்க சென்றார்.

இன்று அதிகாலையில் வீட்டின் கதவு திறந்திருந்தது. ஆனால் அற்புதம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. காலையில் பால்காரர் வந்து வீட்டில் பார்த்தபோது அற்புதம்மாள் கொலையுண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்காரர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.
உடனடியாக இது தொடர்பாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அற்புதம்மாள் உடலை பார்வையிட்டனர். அற்புதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை காணவில்லை. மர்மநபர்கள் அவரை கொன்று நகைகயை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீட்டை சுற்றிலும் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், கால் தடங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அக்கம், பக்கத்தினரிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ராமசாமி மனைவி அத்தாயம்மாள் ( 65) என்பவரை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.

ராமசாமிக்கு அப்பகுதியில் பல ஏக்கர் சொத்து உள்ளது. வசதியான கணவன்-மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருவதை நோட்டமிட்டு அத்தாயம்மாளை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த கொலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதேபோல் கடந்த 8-ந்தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு இந்த தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்தனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் கொலைகளை செய்தது ஒரே கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு இந்த கொலைகள் நடைபெறுவதால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.