
மதுரை ரெயில்வே அதிகாரிக்கு கூலிப்படை கொலை மிரட்டல்: சென்னை தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு
மதுரை பைபாஸ் ரோடு எஸ்.பி.ஐ. ஆபிஸர்ஸ் 2-வது காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 59). இவர் ரெயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் சென்னை வேளச்சேரியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் தான் நடத்தி வரும் தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்காக ரூ.30 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி ரூ.30 லட்சம் கடன் கொடுத்தால் அதனை மாத தவணைத் தொகையாக செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அது தவிர ஒவ்வொரு மாதமும் கடன் தொகைக்கு ஏற்பட ரூ.25 ஆயிரத்தை வட்டியாக பாலசுப்பிரமணியனுக்கு கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய பாலசுப்பிரமணியன் வங்கி மூலமாக ரூ.27 லட்சத்தை லட்சுமி நாராயணனுக்கு செலுத்தியுள்ளார். கடன் பெற்ற நாளிலிருந்து 2 தவணைகள் மட்டும் லட்சுமி நாராயணன் செலுத்தி உள்ளார். ஆனால் கூறியபடி வட்டி தொகையை செலுத்தவில்லை. அவருக்கு மாதம் தருவதாக சொன்ன ரூ.25 ஆயிரமும் கொடுக்கவில்லை.
இதையடுத்து கொடுத்த கடனை பாலசுப்ரமணியன் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி நாராயணனும், அவரது மனைவி சுதாவும் சேர்ந்து கொண்டு உன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி நாராயணன் அவரது மனைவி சுதா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
