Police Department News

பார் உரிமையாளர் கொலைக்கு பழிக்குப்பழி: வாலிபர் கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது

பார் உரிமையாளர் கொலைக்கு பழிக்குப்பழி: வாலிபர் கொலையில் பெண் உள்பட 4 பேர் கைது

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த கீழத்திடியூர் பகுதியை சேர்ந்தவர் அல்லல் காத்தான் என்ற கார்த்திக் (வயது 24). இவர் நெல்லை வேளாண் துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் கார்த்திக் நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான பேச்சி முத்துவுடன் நெல்லைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கும்பல் பணகுடி அருகே வைத்து மோட்டார் சைக்கிள் மீது காரை மோதவிட்டு கார்த்திக்கை காரில் கடத்தி சென்றது.

இந்நிலையில் நேற்று மதியம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் அவர் தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லையை அடுத்த பேட்டையை சேர்ந்த மதன்(23), கோபால சமுத்திரத்தை சேர்ந்த தளவாய்பாண்டி(23), மானூரை சேர்ந்த கார்த்திக் (31) ஆகியோர் சேர்ந்து அல்லல்காத்தான் என்ற கார்த்திக்கை காரில் கடத்தி சென்று கொன்றது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நெல்லை பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். அ.தி.மு.க. வட்ட செயலாளராக இருந்த இவர், அப்பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது. இதில் தொடர்புடையவர்கள் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பிச்சை ராஜை கொன்றவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்தால் தான் ஆத்திரம் தீரும் என்று அவரது மனைவி பொன்செல்வி புலம்பி வந்துள்ளார். இதைக்கண்ட பிச்சை ராஜின் அண்ணன் மகன் மதன், தங்கை மகன் கார்த்திக் ஆகியோர் வருத்தம் அடைந்துள்ளனர். அவர்கள் எப்படியாவது பிச்சை ராஜை கொலை செய்தவர்களை பழிக்குப்பழியாக கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் கொலையாளிகளை பார்ப்பதற்காக அவர்களது நண்பர் அல்லல்காத்தான் என்ற கார்த்திக் நாகர்கோவில் சென்றுள்ளதை மதனும், கார்த்திக்கும் அறிந்துள்ளனர்.
இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து திரும்பி வரும்போது அந்த நபரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒரு காரில் 2 பேரும் புறப்பட்டுள்ளனர். அப்போது மதன் தனது அக்காள் கணவரான கோபாலசமுத்திரத்தை சேர்ந்த தளவாய் பாண்டியையும் அழைத்துள்ளார். பின்னர் 3 பேரும் அங்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அதன்பின்னர் பணகுடியில் வைத்து கடத்தி சென்றுள்ளனர்.
இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் கார்த்திக்குடன் வந்த பேச்சிமுத்து தப்பியோடி பணகுடி போலீசில் நடந்த சம்பவங்களை கூறியதன்பேரில் போலீசார் நான்குவழிச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை நேற்று ஆய்வு செய்தபோது தான் அவர்களுக்கு ஏர்வாடி பகுதியில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் கிடைத்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
மேலும் அவர்களை கொலை செய்ய தூண்டியதாக பிச்சை ராஜின் மனைவி பொன்செல்வியையும் வழக்கில் சேர்த்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.