
மதுரையில் தனியார் நிறுவன குடோனில் டீத்தூள் பாக்கெட்டுகள் திருட்டு
மதுரை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணி ராஜசேகர் (வயது 68). இவர் மதுரை பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சியின் குடோன் பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 18 வருடங்களாக இந்த குடோனின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இங்கு பல்வேறு பலசரக்கு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குடோனை பூட்டிவிட்டு சேவியர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் வேலைக்கு வந்தபோது குடோன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்த சேவியர் உள்ளே சென்று பொருட்களை சரிபார்த்தபோது ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள டீ-காபி தூள் பாக்கெட்டுகள். திருடப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது குடோனில் வேலை பார்த்த நீக்கப்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி மூக்கன் மகன் தென் பாலமுருகன் (23) சுவர் ஏறி குதித்து திருடிச்சென்றது ப திவாகி இருந்தது.அவருடன் அய்யர் பங்களா காவேரி 8-வது தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ஹரிஹரன் (19) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தென் பாலமுருகன், ஹரிஹரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
