
155 முறை போக்குவரத்து விதிமீறல்! ரூ.86 ஆயிரம் அபராதம்.. பைக்கை தூக்கிய அதிகாரிகள்! ஆடிப்போன இளைஞர்
கேரளாவில் 155 முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட இளைஞருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால், இந்த தொகையையும் அவர் செலுத்தவில்லை என்பதால் பைக்கை பறிமுதல் செய்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு புதிய முறை கையாளப்படுகிறது. கேரளாவின் முக்கிய நகரங்களில் உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை அப்படியே புகைப்படம் எடுத்துவிடும். இதனை, கட்டுப்பாட்டு அறையில் உள்ள போலீசார் கண்காணித்து அவர்களுக்கு செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நடவடிக்கையை தொடங்கி விடுவார்கள்.
சோலார் மின்சக்தி மூலம் இயங்கும் இந்த கேமராக்கள் 4 ஜி இணயவசதி உதவியுடன் தரவுகளை உடனுக்கு உடன் அனுப்பிவிடும். அதாவது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டுவது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, சிக்னல் ஜம்பிங் செய்வது, அதிவேகத்தில் செல்வது உள்ளிட்ட சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை போலீசார் எங்கேயும் மறித்து ஸ்பாட்டில் பைன் போட மாட்டார்கள். மாறாக அவர்கள் செல்போனுக்கு மெசேஜ் போய்விடும். கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் இந்த முறைதான் நடைமுறை உள்ளது.
இந்த நிலையில், கண்ணூா் மாவட்டத்தின் மட்டூல் பகுதியில் தனது டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் ஏஐ கேமராவில் சிக்கியுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது, அந்த இளைஞர் ஏற்கனவே பலமுறை இதேபோன்ற விதிமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். ஒருமுறை இருமுறை அல்ல.. மொத்தம் 155 முறை சாலை விதிகளை மீறியிருக்கிறாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணூர் போலீசார், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட நபருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம் விதித்தனர். அது மட்டும் இன்றி அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. பலமுறை அபராத தொகையை செலுத்துமாறு மெசேஜ் அனுப்பியும் விதி மீறலில் ஈடுபட்ட அந்த இளைஞர் கட்டவில்லை என்பதால், அவரது பைக்கையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், இந்த பைக்கை விற்றால் கூட தன்னால் இவ்வளவு அபராத தொகையை செலுத்த முடியாது என வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் இளைஞர் முறையிட்டு இருக்கிறார். ஆனால், சட்ட விதிகள்தான் இது எனவும் இதில் தங்களால் தலையிட முடியாது எனவும் கூறி பைக்கை பறிமுதல் செய்து கொண்டு போயிருக்கிறார்கள் அதிகாரிகள்.
