ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது
திமிங்கலத்தின் வயிற்று பகுதியில் உருவாகும் பழுப்பு நிற மெழுகு பொருள் திமிங்கல எச்சம் (அம்பர்கிரிஸ்) என்று அழைக்கப்படுகிறது. விலையுயர்ந்த வாசனை திரவியங்கள் தயாரிக்க அம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச சந்தையில் திமிங்கல எச்சத்திற்கு அதிக விலை கிடைக்கிறது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கல எச்சம் வைத்திருப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் பலர் திமிங்கல எச்சத்தை கடத்தி வருகின்றனர்.
அதனை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சூரில் திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் போலீசாரின் சோதனையில் சிக்கினர். திருச்சூர் நகர பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ எடையுள்ள திமிங்கல எச்சம் இருந்தது. அதனை பாஜின்(வயது31), ராகுல்(26), அருள்தாஸ்(30) ஆகிய 3 பேர் காரில் கடத்தி கொண்டு சென்றனர். அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக அவர்கள் கடத்தி கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து திமிங்கல எச்சத்தை கடத்தி கொண்டு சென்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 5 கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமிங்கல எச்சத்தை கடத்தியவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காகவும், மேலும் வாங்க வருபவர்கள் தங்களை அடையாளம் காணுவதற்காகவும் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் காரில் வந்திருக்கின்றனர். இருந்தபோதிலும் கடத்தல்காரர்கள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.