
குடியரசு தினவிழாவில் நலத்திட்ட உதவிகள் ரூ.2.76 கோடி; மதுரையில் கலெக்டர் சங்கீதா வழங்கினார்
மதுரை மாவட்டத்தில் நடந்த குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் ரூ.2.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார்.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் 75வது இந்திய குடியரசு தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கலெக்டர் சங்கீதா தேசிய கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
வருவாய், சமூகநலம், மருத்துவம், பிற்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் ரூ.2 கோடியே 76 லட்சத்து 68 ஆயிரத்து 807 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 210 போலீஸ்துறை அலுவலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 260 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பொதுத்தேர்வில் அதிக மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டனர்.
பின்னர் பல்வேறு பள்ளி மாணவர்களின் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிர்மலா, சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், டி.கல்லுப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி, மதுரை மேற்கு ஒன்றியம் மற்றும் எழுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், திருமங்கலம் பி.கே.என்., பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை விஸ்வநாதபுரம் சித்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 500 மாணவ, மாணவியர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
இதில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., நரேந்திரன் நாயர், மதுரை டி.ஐ.ஜி., ரம்யாபாரதி, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே, கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, பூமிநாதன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
