
அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடி 6 மாதத்தில் 1,376 வழக்குகள் பதிவு
சமூக வலைதளம் வாயிலாக, பிரபலங்கள் பெயரில் போலியாக கணக்கு துவங்கி, பண மோசடி செய்தது தொடர்பாக, ஆறு மாதத்தில், 1,376 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, மாநில சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆன்லைன்’ வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கியோர் குறித்த தகவல்களை திரட்டுகின்றனர். மேலும், தனிப்பட்ட நபர்கள் பிற தளங்களில் பகிரப்படும் தகவல்களையும் சேகரிக்கின்றனர்.
இதன் வாயிலாக, மூத்த அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் என, பிரபலங்கள் பெயர்களில் போலியாக கணக்கு துவக்குகின்றனர்.
இதன் வாயிலாக, சம்பந்தப்பட்ட நபர்கள் கீழ் பணிபுரிவோர் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவை என, காரணங்களை தெரிவித்து, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில், இத்தகைய மோசடி குறித்து, ஆறு மாதத்தில், 1,376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள், சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாக, வழக்கத்திற்கு மாறாக வரும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்.
அப்படி யாராவது கோரிக்கை விடுப்பதாக, மூன்றாம் நபர் அல்லது தெரியாத நபர்களிடமிருந்து தகவல் வந்தால், சம்பந்தப்பட்ட நபரை போனில் அழைத்து, விபரம் உண்மையா என்பது குறித்து விசாரித்துக் கொள்ளுங்கள்.
மின்னஞ்சல் உட்பட சமூக வலைதளத் தொடர்புகளின் கடவுச்சொற்களை தவறாமல் புதுப்பியுங்கள். சமூக வலைதளங்களில், தனி உரிமை குறித்த பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பாய்வு செய்யுங்கள்.
சமீபத்திய, சைபர் கிரைம் மோசடிகள் குறித்தும், அவர்கள் பண மோசடியில் ஈடுபடும் தந்திரங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, கட்டணமில்லா, ‘1930’ என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in எனும் இணையதளம் வாயிலாகவும் புகார் செய்யுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
