Police Department News

அம்பானி வீட்டு திருமண விழாவில் திருட ஸ்கெட்ச்… டெல்லியில் சிக்கிய `திருச்சி கேங்’

அம்பானி வீட்டு திருமண விழாவில் திருட ஸ்கெட்ச்… டெல்லியில் சிக்கிய `திருச்சி கேங்’

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் ரூபாய் மற்றும் லேப்டாப் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் இத்திருட்டு தொடர்பாக ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி டெல்லியில் ஜெகன், தீபக், குணசேகர், முரளி, ஏகாம்பரம் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து ராஜ்கோட் போலீஸ் கண்காணிப்பாளர் ராஜு பார்கவ் கூறுகையில், ”கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடலாம் என்ற நோக்கத்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர். ஜாம்நகர் சென்று பார்த்த போது அங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக இருந்ததால் அங்கு திருடும் திட்டத்தை கைவிட்டுவிட்டு ஜாம்நகர் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்பை திருடினர்.

பின்னர் அங்கிருந்து ராஜ்கோட் சென்று அங்கு மெர்சிடிஸ் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 10 லட்சம் பணம் மற்றும் லேப்டாப்பை திருடினர். அதனை முடித்துக்கொண்டு டெல்லி சென்றனர். அக்கூட்டத்தில் மதுசூதன் என்பவர்தான் தலைவனாக விளங்கியுள்ளான். அவன் தற்போது தலைமறைவாக இருக்கிறான். அவன் தான் எங்கு திருடவேண்டும் என்பதை முடிவு செய்வான். இக்கும்பல் முக்கிய நகரங்களுக்கு ரயிலில் சென்று கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் கார் கண்ணாடியை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த நான்கு மாதத்தில் ராஜ்கோட், ஜாம்நகர், அகமதாபாத் மற்றும் டெல்லியில் 11 இடங்களில் திருடி இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.