அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து – இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராம பகுதியில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாசர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (20), பழனி (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கடேசன் (20), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ராமநத்தம் போலீசார், விபத்தில் பலியான மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.