
பழனி பங்குனி உத்திர திருவிழா நேரத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலியான இ-மெயில் அனுப்பிய நபரை கைது செய்து சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
கடந்த 23.03.2024 ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர் இ-மெயில் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு இல்லை என்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் போலியான செய்தியை அனுப்பிய நபர் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (45) என்பவர் என தெரியவந்தது, உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் இதுபோன்று போலியான செய்திகளை அனுப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்.
