ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை காவல் ஆணையர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. நாளை காலை அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக ராணி மேரி கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் மனோகரன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் ஆரோக்கிய பிரகாசம், விமலன், விஸ்வேஸ்வரய்யா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5 காவல் ஆய்வாளர்கள், 10 உதவி ஆய்வாளர்கள், 30 போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனி அறையில் வரிசையாக அடுக்கி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளின் முன்பு துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் நுழைந்து விட முடியாத அளவுக்கு ராணிமேரி கல்லூரி போலீஸாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகேயன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இணை ஆணையர் மனோகரன் ஆகியோர் நேற்று காலை ராணிமேரி கல்லூரிக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப் பாக செய்யப்பட்டுள்ளன. மிக வும் சிறப்பாகவும், அமைதியாகவும் ஓட்டு எண்ணிக்கை நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்றார்.