சோதனை சாவடிகளில் இரவு பாதுகாப்பு பணியில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தடை உத்தரவை மீறி செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. ஊரடங்கையொட்டி நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரோந்து பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அதேபோல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகளில், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை சாவடி மற்றும் கொரோனா வார்டு பாதுகாப்பு பணியில் ஆண் போலீசாருடன், பெண் போலீசாரும் பணியாற்றி வருகின்றனர். நெல்லை மாநகரில் பெண் இன்ஸ்பெக்டர்கள் 15 பேர், எஸ்ஐக்கள் 40 பேர், போலீசார் 175 பேர் என மொத்தம் 230 பேரும், மாவட்டத்தில் பெண் இன்ஸ்பெக்டர்கள் 25 பேர், எஸ்ஐக்கள் 60 பேர், போலீசார் 250 பேர் என மொத்தம் 340 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் மாநகரம், மாவட்டத்தில் ஏ,பி,சி,டி என்ற அட்டவணைப்படி சுழற்சி முறையில் ஆண்களுடன் பெண் போலீசாரும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி, இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை என பணியில் இருப்பர். இதில் ஒவ்வொரு பிரிவு போலீசாருக்கும் ஒரு வாரம் பணி, ஒரு வாரம் ஓய்வு என சுழற்சி முறையில் அளிக்கப்படுகிறது
இரவு என பணி என்பது இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 12 மணி நேரமாகும். இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் இயற்கை உபாதை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே பெண் போலீசாருக்கு இரவு நேரங்களில் பணி ஒதுக்கினால் காவல் நிலையம் அருகே பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும் அல்லது ஊரடங்கு காலம் முழுவதும் பகல் நேரங்களில் மட்டுமே அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். நெல்லை மாநகரில் பெண் இன்ஸ்பெக்டர்கள் 15 பேர், எஸ்ஐக்கள் 40 பேர், போலீசார் 175 பேர் என மொத்தம் 230 பேரும், மாவட்டத்தில் பெண் இன்ஸ்பெக்டர்கள் 25 பேர், எஸ்ஐக்கள் 60 பேர், போலீசார் 250 பேர் என மொத்தம் 340 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.