Police Department News

புத்தாண்டு இரவில் மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 125 பேர்; பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று இல்லை: போக்குவரத்து போலீஸார்

புத்தாண்டு இரவு மது போதையில் வாகனம் ஓட்டி சிக்கிய 125 பேருக்கு பாஸ்போர்ட் வாங்க தடையில்லாச் சான்று வழங்க முடியாது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக சென்னையில் இருசக்கர வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார் பைக்குகள் சந்தையில் நுழைந்துள்ளன. இதன் காரணமாக சென்னையில் சாலைகளில் செல்லும் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதும், பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது.

புத்தாண்டு இரவு போதையில் வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகி வருகிறது. 2017-ல் போலீஸார் எவ்வளவோ கெடுபிடிகள் செய்தும் 8 பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில்லா புத்தாண்டாக இந்த ஆண்டை அனுசரிக்க உத்தேசித்த போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு 9 மணி முதல் புத்தாண்டு அதிகாலை 3 மணி வரை சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நடைமுறைகளை  கொண்டு வந்தனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகள் போல் இந்த ஆண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக கடும் நடவடிக்கை எடுத்தனர்.

புத்தாண்டு அன்று கண்டபடி சென்னையில் வாகனங்களை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டாலோ, மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டினாலோ சிக்குபவர்கள் பாஸ்போர்ட் பெறும்போது போலீஸார் வழங்கும் தடையில்லாச் சான்று வழங்கப்படாது என்று எச்சரித்திருந்தனர்.

இதனிடையே புத்தாண்டு அன்று நடந்த வாகன சோதனையில் 125 பேர் மது அருந்தி வாகனத்தை இயக்கியது கண்டறியப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஏற்கெனவே அறிவித்தபடி பாஸ்போர்ட் பெற தடையில்லாச் சான்று வழங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். அவர்கள் ஏற்கெனவே பாஸ்போர்ட் எடுத்திருந்தால் புதுப்பித்தல் நேரத்தில் தடையில்லாச் சான்று வழங்க முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்த திட்டத்தை புத்தாண்டு மட்டுமல்லாமல் சாதாரண நடைமுறைக்கும் கொண்டு வரலாமா என்றும் போலீஸார் யோசித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.