Police Department News

தேனியில் முன் விரோத தகராறில் கொடூரம்: தந்தை, மகள் மீது காரை ஏற்றிக் கொன்ற இளைஞர் கைது

தேனியில் முன் விரோதம் காரணமாக தந்தை மகளை கார் ஏற்றி கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்..

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். சொந்தமாக டீக்கடை நடத்தி வந்தார். இவரது உறவினர் ரமேஷ்குமார். செல்வராஜ் மற்றும் ரமேஷ்குமார் இடையே டீக்கடை நடத்துவதில் தகராறு இருந்துள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் இருந்துள்ளது. இதுபற்றி ஊர் பஞ்சாயத்து, அக்கம் பக்கத்தவர் பேசியும் பிரச்சினை தீரவில்லை. இருவருக்குமான மோதல் அடிதடி அளவில் சென்றுள்ளது. ரமேஷ்குமார் செல்வராஜை கடுமையாக மிரட்டி தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி புகார் அளித்தும் கண்டு கொள்ளாததால் செல்வராஜ் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தது தடுக்கப்பட்டது.

ரமேஷ்குமார் மிரட்டல் குறித்து கண்டமங்கலம் போலீஸில் செல்வராஜ் புகார் அளித்தார். ஆனால் புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ரமேஷ்குமார் செல்வராஜ் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார்.

தன்னைப்பற்றி புகார் அளித்ததால் செல்வராஜ் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்தார் ரமேஷ்குமார். இந்நிலையில் இன்று காலை தனது டீக்கடையில் செல்வராஜ் தனது மகளுடன் டீ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே தனது அம்பாசிடர் காரில் வந்த ரமேஷ்குமார் ஆத்திரத்துடன் வேகமாக காரை செல்வராஜ் மற்றும் அவரது மகள் மீது காரை மோதினார்.

இதைப்பார்த்த அங்குள்ள மக்கள் அலறி அடித்து ஓடினர். கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகளும் பலியானார். தனது கணவன், மகள் உயிரிழந்த சம்பவம் கேட்டு அங்கு வந்த அவரது மனைவி கதறி அழுதார்.

காரை மோதி இருவரையும் கொன்ற ரமேஷ்குமார் அங்கிருந்து தப்பிஓடினார், அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவர் சிக்கினார்.

ஆரம்பத்தில் செல்வராஜ் புகார் அளித்தபோதே போலீஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.