சென்னை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்; மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்;
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றில் குதித்த இளைஞர், திடீரென இந்த கரைக்கும் அந்த கரைக்குமாக நீச்சல் அடித்ததை பார்த்த பொதுமக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை படகு மூலம் மீட்டனர். இந்நிலையில் மிக அசுத்தமான தண்ணீர் ஓடும் கூவம் ஆற்றில் யாரும் குளிக்கவோ இறக்கவோ முடியாது. இறங்கினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை உள்ளது. ஆனால் சிந்தாதிரிப்பேட்டை எல்ஜி சாலை அருகே நேற்று முன்தினம் மாலை இளைஞர் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். பொதுமக்கள் திரண்டனர் இதை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றாரோ என நினைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் கூவம் ஆற்றில் நீச்சல் அடித்து கொண்டிருந்தார். இதை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். கூவத்தில் இருந்து அந்த இளைஞரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த இளைஞர் போலீசார் வந்ததை பார்த்து, அவர்களிடம் சிக்காமல் இருக்க ஆற்றின் இரு புறங்களிலும் நீந்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்கு காட்டியபடி இருந்தார்.போலீசார் ஒலி பெருக்கி மூலம் அந்த வாலிபரை கரைக்கு வரும்படி பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர் வரவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் படகு மூலம் அந்த இளைஞரை மீட்டனர். விசாரணையில், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் முன்னுக்கு பின் முரணமாக பேசினார். அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அந்த சம்பவத்தால் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
