144 கோடி மதிப்பிலான இரிடியம் பறிமுதல் – தூத்துக்குடியில் 4 பேர் கைது
தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியபுரம் தனியார் லாட்ஜில் இரிடியம் பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிப்காட் போலீஸ் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், தனிப்பிரிவு எஸ் ஐ. நம்பிராஜன், சிப்காட் எஸ் ஐ.சங்கர், தட்டப்பாறை தனிப்பிரிவு காவலர் விக்னேஷ், சிப்காட் தனிப்பிரிவு காவலர் கலைவாணர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு இரிடியம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சோதனையில் 6 டியூப்களில் 144 மில்லி கிராம் இரிடியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதில் தொடர்புடைய தூத்துக்குடி ராஜீவ் நகரைச்சேர்ந்த மாரியப்பன் மகன் முருகன் (வயது47), தூத்துக்குடி ராஜபாளையம் ஆரோக்கியபுரம் வடக்குத்தெருவைச் சேர்ந்த அந்தோணிபிச்சை மகன் மரியதாஸ் (வயது49), ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த, கருப்பண்ணன் மகன் முத்துராமலிங்கம் (வயது45), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்டனூர் காசி அம்பலம் தெருவைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் வைத்திலிங்கம் (வயது60) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ஜப்பானைச் சேர்ந்த ஜே.வி.சி என்ற நிறுவனம் கடந்த 2010 ம் ஆண்டு மும்பை டிஆர்டிஓ அலுவலகத்தில் இரிடியம் கண்டெய்னர் ஆர்டர் செய்துள்ளது. ஜப்பானுக்கு அனுப்பி வைக்க மும்பை டிஆர்டிஓ அலுவலகத்தில் 10 இரிடியம் பெட்டிகள் காணாமல் போயுள்ளன. இதில் ஒரு கண்டெய்னர் பெட்டியில் ஆறு இரிடியம் குழாய்கள் இருந்துள்ளன. இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் கடத்தப்பட்ட 6 இரிடியம் கண்டெய்னர் தூத்துக்குடியில் தனியார் லாட்ஜில் பதுக்கப்பட்டுள்ளதாகவும், இரிடியத்தை விற்பனை செய்து தருவதற்காக முத்தையாபுரம் தோப்பு தெரு செல்வராஜ் மகன் தங்கம் (வயது55) என்பவர் தன்னை 4 பேரும் நாடி உள்ளனர் என தகவல் கொடுத்ததையடுத்து இரிடியத்தை பறிமுதல் செய்து , 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய TN59 BB 0909 என்ற பதிவெண் கொண்ட இனொவா காரையும் அதிலிருந்த கத்தி, அறிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தூத்துக்குடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
