திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள வி.என்.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவர் திருச்சி, மதுரை, உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி திருச்சியில் உள்ள இவரது அலுவலகத்துக்கு வந்த சிலர், தங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவின் ஆட்கள் என அறிமுகம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், அம்மா ஸ்கூட்டர் மானியம் திட்ட தொடக்க விழா செலவுக்காக பணம் தேவைப்படுவதாகக் கூறி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வாங்கிச் சென்றுள்ளனர். மீண்டும் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து, துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா ரூ.1 கோடி வாங்கி வரச்சொன்னார் எனக் கூறியுள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தில்லை நகர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தியதில் ஓ.ராஜாவுக்கு தொடர்பில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்குத் தெரு வைச் சேர்ந்த ஹரிகரன் (45), பிரேம் ஆனந்த் (42), இளங்கோவன் (38), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள பாடியூரைச் சேர்ந்த கனகராஜ் மகன் யுவராஜா (28), திண்டுக்கல் நவீன் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகணேஷ் (39) ஆகியோரை கைது செய்தனர். மேலும், இவ் வழக்கில் தொடர்புடைய முகுந்தன், செல்வம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.