சென்னையில் போலியான ஓட்டுநர் உரிமம் கொடுத்து வேலைக்குச் சேர்ந்து, காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகனசுந்தரம் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ராகேஷ் என்பவர் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு ஸ்விப்ட் டிசையர் காரை பெற்று ஃபாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைத்து ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், ராகேஷ் திடீரென காருடன் மாயமானதால், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மோகனசுந்தரம் புகார் அளித்தார். ராகேஷின் செல்போன் எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார், அவரை தஞ்சாவூரில் கைது செய்து காரை மீட்டனர். விசாரணையில், அவரது பெயர் ராஜ்கண்ணு என்பதும், ராகேஷ் என்ற போலியான பெயரில் ஓட்டுநர் உரிமம் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது. திருடிச் சென்ற காரை போலியான எண்ணுடன் சொந்த வாகனமாக ஓட்டி வந்ததாக ஒப்புக் கொண்டார். ராஜ்கண்ணுக்கு போலி ஆவணங்கள், போலி நம்பர் பிளேட் தயாரித்து கொடுத்ததாக அமிர்தராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.