கும்மிடிப்பூண்டி அருகே தவறான நட்பு சந்தேகத்தால் பெண்ணின் கைகள் துண்டிக்கப்பட்டது தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்(40); லாரி ஓட்டுநர். இவருக்கு மனைவி சத்யா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
மனைவியிடம் தகராறு
இந்நிலையில், சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த டெய்லர் ஷேக்முகமது என்பவருக்கும் இடையே தவறான நட்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த சங்கர் தனது மனைவி சத்யாவிடம் தகராறு செய்துவந்தார். இதனால், சமீப காலமாக சத்யா தன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷேக்முகமது மனைவி ஷகிலா நேற்று முன்தினம் மாலை சங்கர் வீட்டின் வழியே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த சங்கர், அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், ஷகிலாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில் ஷகிலாவின் 2 கை மணிக்கட்டுகள் துண்டாகின; வாய் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷகிலா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆரம்பாக்கம் போலீஸார், நேற்று சங்கரை கைது செய்தனர்.