மதுரை மாவட்டத்தில், இன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு 4,000 போலீசார்.காவல் ஆணையர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரோந்து செல்ல ஏற்பாடு
மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் ஆகியோரின் நேரடி தலைமையில் 4,000 போலீசார், மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மாநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுரை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய மற்றும் திருப்பரங்குன்றம் என ஆறு சட்ட மன்ற தொகுதிகளும், மாவட்டத்தில் மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், என 4 சட்ட மன்ற தொகுதிகளும் உள்ளன. இந்த 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3586 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் நேற்று முன் தினம் காவல் வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு நள்ளிரவு முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் குற்றங்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டு 1330 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்த வாக்குச் சாவடியிலும் ஒரு பிரச்சனைஏற்பட்டால் போலீசார் உடனடியாக அங்கு வரும் வகையின் வாகன வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்து திரும்பலாம்.
மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. மேலும் மாநகர போலீஸ் கமிஷனரின் மாவட்ட எஸ்.பி.யும் ரோந்து பணி மேற்கொண்டு, அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் நேரில் சென்று கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.