காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் போராட்டம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். போலீஸாரின் கெடுபிடி காரணமாக நேற்று மெரினா கடற்கரை வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் எதிரொலியாக மெரினாவில் அனைத்து வகையான போராட்டங்களுக்கும் காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் தடை விதித்துள்ளார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மெரினாவில் நேற்று முன்தினம் மதியம் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக 5 பெண்கள் உட்பட 18 பேரை அண்ணா சதுக்கம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், அவர்களை விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரை போலீஸாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பெசன்ட் நகர் கடற்கரையில் 2 பெண்கள் உட்பட 12 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விரைந்து சென்ற சாஸ்திரிநகர் போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தீவிர கண்காணிப்பு
1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். அவர்களில் பலருக்கு தொலை நோக்கி கருவி (பைனாகுலர்) வழங்கப்பட்டிருந்தது. கண்காணிப்பு கோபுரம் மீது நின்றவாறும் கண்காணித்தனர்.
மேலும் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை மெரினா உட்புறச் சாலை இரும்பு தடுப்பு வேலிகள் மூலம் மூடப்பட்டது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், நடை பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. இதனால், தினமும் நடை பயிற்சி செய்பவர்கள் மெரினா சாலையோரம் தங்களது பயிற்சிகளை மேற் கொண்டனர்.
கூட்டமாக செல்ல தடை
மேலும் மெரினாவில் கூட்டம், கூட்டமாகச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கருப்பு உடை அணிந்து வந்தவர்களை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் போராட்டக்காரர்கள் எவரேனும் மெரினாவில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ரோந்து வாகனம், குதிரைகள் மூலமும் போலீஸார் கண்காணித்தனர். இதற்கென உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.