சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணிடம் ஒய்வூதிய தொகை நல அலுவலர் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது –
கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி வயது 60 என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 01.09.2021 அன்று அவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் தான் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வருவதாகவும், முதியோர் ஓய்வுதியம் பெற்று தருவதாக கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சுப்புலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது சுப்புலட்சுமி மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்து பாரக்கும் போது தான் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் மோதிரம் என 10 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம பெண் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், முதல் நிலை பெண் காவலர் திருமதி. சுந்தரி மற்றும் காவலர் திருமதி. சுகன்யா உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்யுமாற உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி பாப்பாத்தி (எ) லதா (56) என்பவர் மேற்படி சுப்புலட்சுமியிடம் நூதன முறையில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று (08.09.2021) மேற்படி எதிரியான பாப்பாத்தி (எ) லதாவை தாழையூத்து பகுதியில் வைத்து கைது செய்தனர். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி நகைகளை திருடிய பெண்ணை கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.