Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல்

மதுரை திருமங்கலம் பகுதியில் அதிகரிக்கும் ரேசன் அரிசி கடத்தல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கும் சமூக விரோதிகள் அதனை ஆலையில் பாலிஷ் செய்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

மேலும் வெளி மாநிலங்களுக்கும் ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதன்படி நேற்று முன்தினம் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சிவராமன் தலைமையிலான குழுவினர் சேடப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை அதிகாரிகள் மறித்தனர். அவர்களை கண்டதும் லாரியில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி விட்டார். தொடர்ந்து லாரியில் சோதனை செய்தபோது அதில் 6 டன் ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2வது நாளான நேற்று அச்சம்பட்டி, கிழவனேரி பகுதியில் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சிவராமன், வட்ட வழங்கல் அலுவலர் வீரமுருகன், வருவாய் ஆய்வாளர் சுமன் மற்றும் அருண்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன், துணை வட்டாட்சியர் ராஜன் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 சரக்கு வேன்களில் கடத்தப்பட்ட 7 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் திருமங்கலம் பகுதியில் 13 டன் கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.